ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை தொடங்கியது தமிழக அரசு

இறக்குமதி செய்யப்பட்ட மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் பணியைத் தமிழக அரசு தொடங்கி உள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணலை விற்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மணலை, ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நடவடிக்கையைத் தமிழக அரசு தொடங்கியது.

TNsand இணையதளத்திலும், கைப்பேசி செயலி மூலமும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளும் நபர்களுக்கு வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மணல் விற்பனை செய்யப்படுகிறது.

முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அடுத்த வாரத்தில் இருந்து மணல் விற்பனை செய்யப்படும். TNsand இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு யூனிட் மணல் 9 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், 2 யூனிட் மணல் 19 ஆயிரத்து 980 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version