துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"

சென்னை மாநகராட்சியில், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ஸ்மார்ட் பைக் திட்டம், தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காணாமல் போயுள்ளது… ஸ்மார்ட் பைக்குகள் பராமரிப்பு இன்றி பழுதாகி இருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், திமுக அரசின் காழ்ப்புணர்ச்சியால், சைலன்ட் மோடில் போடப்பட்டுள்ளது இந்த திட்டம்.

போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சென்னை மாநகராட்சியில், மக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில், அண்ணா திமுக ஆட்சியில், ஸ்மார்ட் பைக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியும், மிதிவண்டியைப் பகிரும் தனியார் நிறுவனமும் இணைந்து, சென்னையின் பல்வேறு இடங்களில் மக்களுக்கான சேவையை அளித்து வந்தன. குறிப்பாக, மெட்ரோ ரயில் நிலையங்கள், மெரினா கடற்கரை மற்றும் பல இடங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு, மக்களின் பயணம் எளிதாக்கப்ட்டது.

சென்னை வாசிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த ஸ்மார்ட் பைக் திட்டம் மூலம், ஐ.டி ஊழியர்கள் மற்றும் பிற துறை பணியாளர்களும் அதிகமாக பயனடைந்து வந்தனர்.

இதன் விளைவாக, 100 ஸ்மார்ட் பைக் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஆயிரத்து 500 ஸ்மார்ட் பைக்குகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. மக்களின் ஆரோக்கியத்திலும் இந்த ஸ்மார்ட் பைக்குகள் அதிக பயனை தந்ததால், இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த அண்ணா திமுக அரசு திட்டமிட்டது.

ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த திட்டம் கானல் நீராக மாறிவிட்டது. அண்ணா திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாலேயே, இந்த திட்டத்தை கண்டு கொள்ளாமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

தற்போது, பல நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் பைக்குகள் காணாமல் போய் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் அண்மையில் பெய்த கனமழையால், இந்த ஸ்மார்ட் பைக்குகள் துருபிடித்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக, பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மக்களின் ஆரோக்கியத்தையும், போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையுடன் அண்ணா திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேண்டுமென்றே திமுக அரசு கைவிட்டுள்ளது.

தனது ஆரோக்கியத்திற்காக அவ்வவ்போது மிதிவண்டியில் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லையா எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை புதுப்பித்து, பழுதாகி நிற்கும் ஸ்மார்ட் பைக்குகளை முறையாக பராமரித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்பதே, சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது…

Exit mobile version