அருண்ஜெட்லி பதவி விலக வேண்டும்! – ராகுல்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடி செய்துவிட்டு லண்டன் தப்பிச் சென்றார். இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை லண்டன் வெஸ்ட் மின்ஸ்டெர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து லண்டன் புறப்படுவதற்கு முன்பு, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து பேசியதாக தெரிவித்தார். அப்போது, தனது பிரச்சனையை சமாளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது நிதியமைச்சர் பதவியில் இருந்து அருண்ஜெட்லி விலக வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version