தடையை மீறி ஹாத்ரா செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி கைது!

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக, தடையை மீறிச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயது பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து ஹத்ராஸ் பகுதிக்கு காரில் சென்றனர். ஆனால், ஹத்ராஸ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இருவரும் சென்ற கார்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து கடும் வெயிலுக்கு நடுவே யமுனா விரைவு நெடுஞ்சாலையில் இறங்கிய இருவரும், காங்கிரஸ் தொண்டர்களுடன், ஹத்ராஸ் நோக்கி நடந்து செல்ல முயன்றனர். ஆனால், 2 கிலோ மீட்டர் வரை நடந்து செல்லும் முன்பே ராகுல் மற்றும் ப்ரியங்காவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Exit mobile version