திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக சார்பில் மதுரையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் ஆகஸ்டு 2ம் தேதி காலமானார். திருவாரூர் தொகுதி உறுப்பினரான திமுக தலைவராக இருந்த கருணாநிதி ஆகஸ்டு 7ம் தேதி மரணம் அடைந்தார். எனவே, இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
5 மாநில தேர்தலை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
இடைத்தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்து செயல்பட்டு வரும் அதிமுக, மதுரையில் இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், கருப்பணன், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணிகண்டன், ராஜலட்சுமி, பாண்டியராஜன், பாஸ்கரன், வளர்மதி ஆகிய 15 அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
தேர்தல் பணிக் குழுக்களை அமைப்பது, அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் 11ம் தேதி நடத்தப்படும் பொதுக் கூட்டம், அதிமுகவின் தேர்தல் பிரசார கூட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.