சாலை விபத்துகளில் கடந்த ஓராண்டில் மட்டும் 3,597 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சாலை விபத்துகள் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டு குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளில் 3,597 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தைச் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், இந்தப் புள்ளி விபரத்தில் குண்டும், குழியுமான சாலைகளை மாநில அரசுகள் பராமரிக்க தவறிவிட்டதாக உள்ளதையும் சுட்டிக்காட்டினர். மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விபரங்களுக்கு, சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிப்பது துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், சாலைகளைப் பராமரிக்க முடியவில்லை என்று மாநில அரசுகள் எப்படிச் சொல்லலாம் என்றும், அதை மக்களா பராமரிக்க முடியும் என்றும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், பராமரிக்க முடியாத சாலைகளை, மாநில அரசுகள் அகற்றப் போகிறார்களா என்றும் நீதிபதிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.