பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.7,700 ஆக உயர்வு – அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 4 மாவட்ட நூலகத்திற்கு 5 ஆண்டுகள் இலவச இணையதள வசதியை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 100 நூலகங்கள் பயன்பெறும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வாங்கப்பட்டு வருவதாகவும், இதற்காக 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 82,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அவர்கள் காத்திருப்பு பட்டியல் இருக்க கூடாது என்பதற்காக காலி பணியிடங்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அவை விரைவில் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5,500 ரூபாய் ஊதியம் 7,700 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். மேலும் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள் என கூறிய அவர், பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் போதே அவர்கள் நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள் என்ற நிபந்தனையுடனே அவர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

Exit mobile version