ஆன்லைனில் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை!

ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளிகள் தெரிவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 159 பயனாளிகளுக்கு 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்கள், தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும்  மாணவ, மாணவிகளை வேன் மூலமாக அழைத்து வந்து தனி அறையில் தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார். பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து 18 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதம் இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version