மலேசியாவில் இருக்கும் ஜாகீர்நாயக்கை இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக், தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று அதைத் தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாகவும், மக்களிடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிவருவதாகவும் தேசியப் புலனாய்வு முகமை குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற அவர் மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஜாகீர் நாயக்கை நாடுகடத்த இந்தியா வலியுறுத்தவில்லை என மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்தார். ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக்கில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமதைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசியது குறிப்பிடத் தக்கது.
மலேசியப் பிரதமரின் இந்தக் கருத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார். ஜாகீர் நாயக்கை நாடு கடத்த 2018 ஜனவரி மாதத்தில் மலேசிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், அதிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.