1981ல் பிறந்த இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். மிதவேக இடது கை பந்து வீச்சாளராகவும் இவர் விளங்கினார். இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் இவர் ஒருவர்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் கடந்த 2000ஆம் ஆண்டில் அறிமுகமான யுவரஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றவர்.
2007ல் நடந்த டி20 போட்டியில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் சிக்சர் விளாசியதால் யுவராஜ் சிங் சர்வதேச அளவில் கவனம் பெற்றார், ‘சிக்சர் கிங்’ என்று வர்ணனையாளர்களால் அழைக்கப்பட்டார்.
2011ஆம் ஆண்டின் உலகக் கோப்பைப் போட்டியில் 362 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்த யுவராஜ் தொடர் நாயகன் விருதை வென்றார்.
2011, 2012ஆம் ஆண்டுகளில் புற்றுநோயுடன் போராடினார் யுவராஜ் சிங். பின்னர் 2012ல் புற்றுநோயில் இருந்து அவர் மீண்டு வந்தார். ஆனால் பின்னர் அவரால் குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற முடியவில்லை.
2014ல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.
இந்திய அணியில் கடைசியாக 2017ம் ஆண்டு ஜூன் மாதம் விளையாடினார் யுவராஜ் சிங். பின்னர் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அவரால், குறிப்பிடத் தகுந்த வெற்றிகள் எதையும் பெற முடியவில்லை. இதனால் அந்த அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அவர் சில ஆட்டங்களில் விளையாடியபோதும், அவரது ஆட்டம் முன்புபோல் இல்லை என்ற விமர்சனத்தையே சந்தித்தார்.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் இல்லை என்பதால் தனது ஓய்வு அறிவிப்பை யுவராஜ் சிங் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் கசிந்து வந்தன.இந்நிலையில் அதிகாரபூர்வமாக தனது ஒய்வை அறிவித்தார் யுவராஜ் சிங்.