யூடியூப் கணக்கில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் பணம் சம்பாதிக்கும் பெண் – சிறப்பு பார்வை

பொழுதுபோக்கிற்காகத் தொடங்கிய யூடியூப் கணக்கின் மூலம் தற்போது மாதம் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஈட்டி வருகிறார் பெண் ஒருவர்.

தனி நபர் யூ-டியூப் சேனல் தற்போது அதிக அளவில் வளர்ச்சி அடைந்து வந்தாலும் பெண்கள் மத்தியில் யூ டியூப் கணக்கானது குறைந்த அளவே வரவேற்பைப் பெற்றிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதனை முறியடிக்கும் வகையில் பெண்களும் களத்தில் இறங்கி சாதனை படைத்து வருகின்றனர். கேரளத்தைச் சேர்ந்த அன்னி யூஜின் என்ற இளம்பெண் யூ டியூப் மூலம் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து வருகிறார் .

அன்னி யூஜின் தனது வீட்டில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அதில் விளையக்கூடிய காய், பழ வகைகள் அனைத்தையும் படம் பிடித்து தனது யூடியூப்பில் 2015ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிவேற்றினார். இதனைத் தொடர்ந்து இவரது யூடியூப் பக்கத்தினை பலரும் விரும்பத் தொடங்கியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் பல டிப்ஸ்களையும் பதிவேற்றி வருகிறார் அன்னி யூஜின். தற்போது அன்னி யூஜினுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கின்றனர். 2 கோடிக்கும் அதிகமாக இவரது யூ டியூப் பக்கத்தினைப் பார்த்துள்ளனர்.

தன்னுடைய வீடியோவிற்கு இடையே விளம்பரங்களை ஒளிபரப்பபுவதன் மூலம் தனக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக அன்னி யூஜின் தெரிவிக்கின்றார்.

தன்னுடைய முதல் பதிவிற்கே 8300 பேர் விருப்பம் தெரிவித்ததாகவும், விவசாயம் குறித்த செய்திகள், இயற்கை முறைப் பயிர்ப் பாதுகாப்பு குறித்த செய்திகள் வெளியிடுவதால் பெரும்பாலான விவசாயிகள் தனது யூடியூப்பை பார்வையிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும் அன்னி யூஜின் தெரிவிக்கிறார். விவசாயம் மூலம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, வீடியோவைப் பதிவிடுவதன் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கிறது’’ என்று பெருமையாகக் கூறுகிறார் அன்னி யூஜின்.நியூஸ் ஜெ செய்திகளுக்காக கௌசல்யா சேகர்….

Exit mobile version