இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கித்தருவதாக ஏமாற்றியது திமுக: சமக கட்சி தலைவர் சரத்குமார்

நாங்குநேரி தொகுதியில், 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறிய திமுக, மக்களை ஏமாற்றிவிட்டதாகச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ஏமன்குளத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்காக உழைப்பேன் என வாக்குறுதி அளித்து, வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ, பின்னர் மக்களவைத் தேர்தல் வந்த உடன், மக்களை ஏமாற்றி விட்டு, பாராளுமன்றத்திற்கு சென்று விட்டதாகக் குற்றம் சாட்டினார். இதே போல், மருதகுளம் மற்றும் ஆழ்வாநேரி ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட சரத்குமார், நாங்குநேரியில் 15ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உயர் தொழில்நுட்பப் பூங்கா தொடங்குவதாகவும், அதில் 25ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறி திமுகவினர் மக்களை ஏமாற்றி விட்டதாகத் தெரிவித்தார். பிரசாரத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version