அயனாவரத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற இளைஞர் கைது

சென்னை அயனாவரத்தில் உள்ள இனிப்பகத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் மார்கெட் பகுதியில் அருணகிரி என்பவர், ’குமார் ஸ்வீட் ஸ்டால்’ என்ற இனிப்பக கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து, இரு நூறு ரூபாய்க்கு இனிப்புகளை வாங்கியுள்ளார். மீதம் ஆயிரத்து எட்டு நூறு ரூபாய் பணத்தை பெற்று கொண்ட அந்த ஆசாமி கடையில் இருந்து வேகமாக வெளியேறினார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை சோதனை செய்த போது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதனையடுத்து மர்ம ஆசாமியை விரட்டிச் சென்ற கடை உரிமையாளர் பொதுமக்கள் உதவியோடு பிடித்து அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிப்பட்டவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் ஓட்டேரியை சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது. அவரிடம் 6 இரண்டாயிரம் கள்ள நோட்டுக்களை கைப்பற்றிய காவல்துறையினர், கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட மற்றொரு நபரான சதீஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Exit mobile version