மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற தயாராக உள்ளோம் என, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும், இளம்பெண்களும் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஓர் செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஏராளமானோர், ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பின் மூலம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி, நீண்ட நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசு நலத்திட்டம், 50 ஆயிரத்திற்கும் மேல் மாத ஊதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொண்டு, மாணவர்களுக்கும், அரசுக்கும் கேடு விளைவிக்கும் விதமாக ஆசிரியர்கள் செயல்படுவதாக பி.எட் பட்டதாரிகள் குற்றம் சாட்டினர். ஆசிரியர் என்ற புனிதமான பணியை பணத்திற்காக புறக்கணிக்கும் அரசு ஆசிரியர்களை, ஒட்டு மொத்தமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று கூலி வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான குறைந்த ஊதியத்தை கொடுத்தாலும் அதை மனதார பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியை திறன்பட செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள இளைஞர்கள், அரசை எதிர்த்து, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்படையச் செய்யும் வகையில் எவ்வித போராட்டத்தையும் ஒருபோதும் முன்னெடுக்க மாட்டோம் எனவும் உறுதியளித்துள்ளனர்.
மேலும், தங்களைபோல் தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று கூலி வேலைக்கும், 100 நாள் வேலைக்கும் செல்லும் லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், தங்களின் எதிர்காலத்தையும், மாணவர்களின் நலனையும் கருத்தில்கொண்டு தங்களை ஆசிரியர் பணியில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் நியாயத்திற்கு முரணானது என குறிப்பிட்டுள்ள கூலிப்பணிக்குச்செல்லும் ஆசிரியர்கள், இந்த விவகாரத்தில் அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.