இளைஞர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராடும்போது, அகிம்சை வழியைப் பின்பற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய குடியரசுத்தலைவர், நாட்டின் முன்னேற்றத்துக்காக மக்களும், அரசியல் தலைவர்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்தார். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் போதனைகளும் சிந்தனைகளும், தற்காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளன என்று தெரிவித்தார். நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராடும்போது அகிம்சை வழியைப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார்.
அறிவியல் துறையில், நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சாதனை படைத்து வருகிறது என்று கூறிய அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் இந்தியா கவனம் பெற்றுள்ளது என தெரிவித்தார். 8 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு திட்டம், விவசாயிகள் உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல திட்டங்கள் வெற்றியடைந்துள்ளன என்று கூறினார். இந்த ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு, அரசு முழு ஆதரவு அளிக்கும் எனவும் தெரிவித்தார்.