மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன் வழங்குவது ஊக்குவிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் சட்டபேரவைக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் பலோடா பஜார் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தான் பிரதமராக பதவியேற்ற பிறகே நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என மோடி அடிக்கடி கூறி வருவதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமல் உள்ளிட்டவைகளால் சிறு, நடுத்தர தொழில்கள் முடங்கியதாக சுட்டிக் காட்டிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு தனிநபர் மட்டும் காரணமல்ல ஒட்டுமொத்த மக்களும் தான் என்பதை கூட அறியாதவர் பிரதமர் மோடி என்று விமர்சித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இளைஞர்கள் சுய தொழில் துவங்க வங்கிகளில் இருந்து கடன் பெறுவதை ஊக்குவிக்கும் என்றார்.