27 வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் உயிர்நீத்த வீரரின் குடும்பத்திற்கு, அவரது ஊரை சேர்ந்த இளைஞர்கள் வீடுகட்டி, தங்களது கையை சிவப்பு கம்பளமாக மாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரேதச மாநிலம் பிக்லியா கிராமத்தை சேர்ந்தவர் ஹவல்தர் மோகன்சிங். ராணுவ வீரரான இவர் கடந்த 1992-ம் ஆண்டு வீர மரணமடைந்தார். அதற்குப்பின், இவரது மனைவியான ராஜூ பாய், தனது குழந்தைகளுடன் பாழடைந்த ஓட்டு வீட்டில் அரசாங்கம் தரும் உதவிதொகையான 700 ரூபாயை வைத்து சிரமத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ரக்ஷாபந்தன் பண்டிகையின் பொழுது, ராஜூ பாய் ஊரில் உள்ள இளைஞர்களுக்கு ராக்கி கயிறு கட்டியுள்ளார். இதனையடுத்து மோகன் நாராயண் என்ற இளைஞரின் தலைமையிலான குழு ஒன்று, 2019-ம் ஆண்டுக்குள் அவருக்கு புதிதாக ஒரு வீடு கட்டித் தர வேண்டுமென முடிவெடுத்தனர். அதன்படி ஊர் மக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு, 11 லட்ச ரூபாய் செலவில் புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டது. நேற்று கொண்டாடப்பட்ட ரக்சாபந்தனின் போது, ராஜூபாய்க்கு அவ்வீட்டினை ஊர் இளைஞர்கள் சேர்ந்து தங்களது கைகளை சிவப்பு கம்பளமாக்கி ராஜூ பாய்க்கு பரிசாக வழங்கினர். ராஜூ பாய் இளைஞர்களின் கைகளின் மேல் நடந்து சென்ற காட்சி அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.