யூ டியூப் சூப்பர் ஸ்டார் ‘பியூடைபை’ பற்றிய செய்தி தொகுப்பு

10 கோடி சந்தாதாரர்களைப் பெற்ற முதல் தனிநபர் யூ டியூப் பதிவர் என்ற பெருமையைக் கொண்டவர் யூ டியூப் சூப்பர் ஸ்டார் ‘பியூடைபை’. இவர் தற்போது திடீரெனத் தனது ஓய்வை அறிவித்து உள்ளார். ஏன் இந்த முடிவு? – இந்தத் தொகுப்பு

சுவீடனைச் சேர்ந்தவரான பியூடைபையின் இயற்பெயர் ’பெவீக்ஸ் அர்விட் உல்ஃப் கஜெல்பெர்க்’. 1989ல் பிறந்த இவர், தனது பட்டப் படிப்பை பாதியில் கைவிட்டவர். தொழில் பயிற்சியிலும் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் பியூடைபை – என்ற பெயரில் யூ டியூப் சானல் ஒன்றை, கடந்த 2010ஆம் ஆண்டில் இவர் தொடங்கினார். இதன் பிரதான நோக்கம் வீடியோ கேம்களுக்கு விமர்சனங்களைக் கொடுப்பது.
 
இவரது நகைச்சுவை கலந்த விமர்சனங்கள், யூ டியூபில் சந்தாரர்களை ஈர்த்தன. 2012ஆம் ஆண்டில் 10 லட்சம் பார்வையாளர்களை எட்டிய இவரது யூடியூப் சானல், 2013ஆம் ஆண்டில் 6 கோடி பார்வையாளர்களைப் பெற்றது. இதன் மூலம், அதிகபட்ச பார்வையாளர்களைக் கொண்ட முதல் தனிநபர் யூ டியூப் சானலாக இது அங்கீகரிக்கப்பட்டது. வீடியோ கேம்கள் சந்தையில் இவரது விமர்சனங்கள் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தின.
 
2016ஆம் ஆண்டில் இவரது வீடியோக்கள் யூ டியூபில் அதிகபட்ச பார்வையாளர்களைப் பெற்ற வீடியோக்களாக புகழ்பெற்றன. இதனால் 2016ஆம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற டைம்ஸ் இதழ் ‘உலகின் 100 செல்வாக்குள்ள மனிதர்கள்’ பட்டியலில் இவரது பெயரையும்
சேர்த்தது. இப்போது ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இவருக்கு யூ டியூப் மூலம் கிடைக்கிறது.
 
இந்திய பாடல் வெளியீட்டு நிறுவனமான ‘டீ-சீரீஸ்’, சமீபத்தில் இவரை முந்தி, யூ டியூபில் முதலிடத்தைப் பிடித்தது. மீண்டும் இவரால் முதலிடத்தைப் பிடிக்கவே முடியவில்லை. ஆனாலும், யூ டியூபில் முதலிடத்தில் உள்ள தனிநபர் என்ற இவரது சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
 
இந்நிலையில், வரும் ஆண்டு முதல், யூ டியூபில் புதிய விதிகள் அமலாக உள்ளன. இதனால் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உள்ளடக்கங்களைக் கொண்ட யூ டியூப் சானல்கள் 90 சதவீதம் வரையிலான வருவாய் இழப்பை சந்திக்க உள்ளன. இது பியூடைபைக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான், அடுத்த ஆண்டு முதல் யூ டியூபில் இருந்து ஓய்வெடுக்க உள்ளதாக தனது சமீபத்திய வீடியோவில் பியூடைபை கூறி உள்ளார்.
 
அந்த வீடியோவில், ‘நான் மிக சோர்வாக இருக்கிறேன், உங்களுக்கு எனது விலகலை முன்கூட்டியே தெரிவிக்கிறேன் – என்று பியூடைபை குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோவைக் கண்ட அவரது ரசிகர்கள், இந்த முடிவை மறு பரிசீலனை செய்யும்படி அவரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். யூ டியூபின் புதிய விதி, இணைய உலகில் எந்த விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்தே, பியூடைபை தனது முடிவை மறு பரிசீலனை செய்யலாமா, வேண்டாமா என முடிவு செய்வார் என்று, பிரபல யூ டியூப் பதிவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

Exit mobile version