இனி வாட்ஸ்அப் குரூப் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்

சமூக வலைத்தளமான வாட்ஸ்அப் குரூப்களில் வலம் வரும் செய்திகள் சில நேரங்களில் பயனுள்ளதாகவும், பல நேரங்களில் நமக்கு எரிச்சலூட்டும் வகையிலும் அமையும். தினமும் தூங்கி எழுந்து பார்த்தால் ஏதேனும் ஒரு குரூப்களில் நம் அனுமதியில்லாமல் நாம் உறுப்பினராக சேர்க்கப்பட்டிருப்போம். அதில் யார் யார் தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் என தேடிக்கொண்டு இருக்கும் போதே நம் நம்பர் யாரோ ஒருவரால் பகிரப்பட்டு இருக்கும். பின் முன்பின் தெரியாத அந்த எண்ணிலிருந்து நமக்கு தொந்தரவுகள் வரக்கூடும். இதுக்கெல்லாம் ஒரு முடிவு இல்லையா என நினைத்தவர்களுக்கு புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி வாட்ஸ்அப் உபயோகிப்பவரின் அனுமதி இல்லாமல் அவரை குரூப்களில் சேர்க்க முடியாது. மேலும் இந்த வசதியில் குரூப்பில் இணையலாமா வேண்டாம் என்று முடிவு செய்யும் வகையில் அதன் அணுகுமுறை உள்ளது. ஏதேனும் ஒரு குரூப் அட்மின் குழுவில் இணைய உங்களுக்கு அழைப்பு விடுக்கலாம். நீங்கள் அழைப்பை ஏற்காவிட்டால் 72 மணி நேரங்களில் அது தானாகவே காலாவதியாகிவிடும்.

இந்த வசதியைப் நீங்கள் பெற Whatsapp-ன் Account பகுதிக்கு சென்று அதில் காட்டும் Privacy-ல் Group என்பதை தேர்வு செய்து கொள்ளவும். அங்கே Everyone, My Contacts, Nobody என்ற தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கானதை தேர்வு செய்து கொள்ளலாம். இதுவும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதிகளை போன்றது.

தற்போது ஐபோன் வெர்ஷனில் பரிசோதனை செய்யப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் அனைத்து வெர்சனுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version