பொறியியல் படிப்பில் சேர இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் மாதம்16 வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
2020-21 ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
பொறியியல் படிப்புக்கு, இன்று முதல் ஆகஸ்ட் 16 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்த, அமைச்சர் அன்பழகன், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் என்றார். சான்றிதழ் சரிபார்க்க மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேரில் வரத் தேவையில்லை எனவும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 52 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.