அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 133-வது பிறந்த தினமான இன்று மருத்துவ தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் தாய்சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவமனை தினத்தை முன்னிட்டு 9 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அதேபோல் சிறப்பு சிகிச்சை முகாம், உறுப்புதானம், இரத்த தான முகாம் உள்ளிட்டவையும் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் அறுவை சிகிச்சையின்றி சுகப்பிரசவம் பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் யோகா பயிற்சியை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் பிக்மி ((pick me)) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதன் மூலமாக அவர்களின் அனைத்து செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும், என்றும் அவர்கள் கூறியுள்ளார்.