யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அதிரடி சோதனை அமலாக்கத்துறை, அவர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
யெஸ் வங்கி அதிக கடன்களை வழங்கியதால், வாராக்கடன் பெருகி, மூலதான நெருக்கடியில் சிக்கியுள்ளது. யெஸ் வங்கி நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வங்கி தன்வசப்படுத்தியுள்ளது. யெஸ் வங்கி சிலகாலம் கடன் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும், வங்கியின் நிர்வாகத்தையும் மாற்றியமைக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து, ராணா கபூர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குநரகம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி வாங்க முன்வந்துள்ளது. 2 ரூபாய் முகமதிப்புடைய பங்குகளை 10 ரூபாய்க்கு குறையாமல் வாங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பங்குச் சந்தையில், 37 ரூபாய் வரை விற்பனையான யெஸ் வங்கி பங்குகள், நேற்றைய வர்த்தகத்தின்போது, 5 ரூபாய் 56 பைசா என்ற அளவில் சரிந்தது. பின்னர் சற்று அதிகரித்து, 16 ரூபாய் 20 பைசா என்ற அளவில் நிலைகொண்டது.