கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்த மாநில ஆளுநரை சந்தித்து எடியூரப்பா மனு அளித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த சில நாட்களாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில எம்.எல்.ஏக்கள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஆட்சியை காப்பாற்றும் முயற்சியாக, மதசார்பற்ற ஜனதா தள அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், பெங்களூருவில், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற காங்கிரஸ் – ம. ஜ. த கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா இன்று ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் அந்த அரசு மக்கள் ஆதரவையும் இழந்து விட்டது என்றும், ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.