கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள எடியூரப்பா தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை மாற்றி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலகியதையடுத்து பெரும்பான்மையை இழந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. இதில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன.
இதனால், முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்ததையடுத்து, பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் அனுமதியின் பேரில் பாஜக தலைவர் எடியூரப்பா இன்று மாலை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்தநிலையில், தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை எடியூரப்பா மாற்றி அமைத்துள்ளார்.
எடியூரப்பா என்பதை இதுவரை அவர் ஆங்கிலத்தில் BSYeddyurappa என்று எழுதி வந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் BSYediyurappa என அவர் மாற்றி உள்ளார். இதற்கு நியுமராலஜி காரணம் எனக் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் எடியூரப்பா அறையின் பெயர் பலகையிலும் இந்த புதிய எழுத்துக்களுடன் போர்ட் வைக்கப்பட்டுள்ளது