கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்எல்ஏக்கள், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க, குமாரசாமியை நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் காங்கிரசை சேர்ந்த 12 எம்.எல்.ஏக்கள், மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்தனர். இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
இந்தநிலையில், கர்நாடகாவின் முதலமைச்சராக 4வது முறையாக எடியூரப்பாக பதவியேற்றார். பாஜக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குமாரசாமி தலைமையிலான அரசை கலைப்பதில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர்தான் தீவிரமாக இருந்தததாக கூறப்படுகிறது. இதனிடையே மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் சிலர், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என குமாரசாமி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.