வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இன்று மதியத்திற்குள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யாஸ் என பெயரிடப்பட்ட இந்த புயலால் மணிக்கு 165 கிமீ முதல் 185 கிமீ வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கத்தால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் தீவிரமடைந்து ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் தம்ரா துறைமுகம் அருகே இன்று காலை தீவிரமடையும். இதன் பின்னர் ஒடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதி அருகே இன்று நண்பகல் அதி தீவிர சூறாவளி புயலாக கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.