கோவையில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை சுகாதாரத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியனிடம் தொண்டாமுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வேலுமணி அளித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் கே.அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம், வானதி சீனிவாசன், அமுல் கந்தசாமி, தாமோதரன், கந்தசாமி, பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வேலுமணி கோவையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கோரிக்கை மனுவை சுகாதாரத்துறை அமைச்சரிடம் வழங்கினார்.
அதில் கொரோனா முதல் அலையின் போது மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் பெறாமல் தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்வைத்துள்ளார்.