சீனாவின் வூஹான் ஆய்வக விஞ்ஞானிகள் வௌவால்கள் குறித்து ஆய்வு செய்யும் புகைப்படங்கள் ஆய்வக வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பல சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றியதுதான் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். மறுபுறம், வூஹான் ஆய்வகத்தில் இருந்ததுதான் வைரஸ் பரவியது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வூஹான் மாகாண ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறியிருந்தார். ஆதாரங்களை தற்போது வெளியிட முடியாது என்று டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், வூஹான் ஆய்வகம் தொடர்பான எத்தகைய ஆதாரங்கள் அமெரிக்காவிடம் உள்ளன என்ற எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கின. கடந்த 2018 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான ரிக் ஸ்விட்சர் என்பவர், வூஹான் ஆய்வகத்திற்கு சென்றிருந்தார். அவரின் வருகை தொடர்பான குறிப்புகளும், வூஹான் ஆய்வக வலைத்தளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இவர் மூலம் தான் வௌவால்கள் மீதான ஆய்வு குறித்த அபாயங்கள் அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர், “china daily” என்ற சீனப் பத்திரிக்கை வூஹான் ஆய்வகத்தில் சுமார் 1,500 வைரஸ் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படத்தில் குளிர்சாதன பெட்டி சரியாக மூடப்படாமல் இருந்தது சிலரால் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து, உடனடியாக அந்த புகைப்படம் நீக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த புகைப்படமும் தற்போது கவனம் பெற்றுள்ளது. வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தின் துணை இயக்குநர் யுவான் ஜிமிங், ஆய்வகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து முன்னரே தெரிவித்திருந்தார். பெரும்பாலான ஆய்வகங்களில் பாதுகாப்பு மேலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் இல்லாததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். வூஹான் ஆய்வகத்திற்கு எதிரான இத்தகைய ஆதாரங்கள், சீன அரசுக்கு மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வூகான் ஆய்வக வலைத்தளத்தில், வனப்பகுதி, மற்றும் மலை குகைகளில் சீன விஞ்ஞானிகள் வௌவால்களை பிடிப்பது போன்றும், ஆய்வு செய்வது போன்றும் இருந்த புகைப்படங்கள் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன. வௌவால்களை ஆய்வு செய்வது போன்ற புகைப்படங்கள் நீக்கப்பட்டிருப்பது தற்போது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.