திருச்சி அரசு மருத்துவமனையில், வேறு ஒரு பெண்ணுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையை, தனது மனைவிக்கு அளித்ததாக, கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா என்பவர் மகப்பேறுக்காக கடந்த 4ஆம் தேதி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. குழந்தை பிறந்த பின், 13ஆம் தேதி மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உமா, குழந்தையை பிரிந்து அதே கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மகப்பேறு வார்டுக்கு கீழ்ப் பகுதியிலேயே கொரோனா சிகிச்சை மையமும் இயங்கி வருவதால், கொரோனா தொற்று எளிதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவுவதாக குற்றச்சாட்டை வைத்துள்ள உமாவின் கணவர் நீலமேகம், கொரோனா வார்டை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே வேறொரு உமா என்பவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையை தனது மனைவிக்கு அளித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.