“தமிழகத்தின் ஐசக்-அசிமோவ்”சுஜாதாவுக்கு இன்று பிறந்தநாள்

சுஜாதா….!

எழுத்தின் வழியே இதயத்துக்குள் வாசம் செய்யும் வழிமுறை அறிந்தவன். காலம் மறக்கா பேரறிவாளர்…ஒரு நிகழ்வை ஊர் ஒரு கோணத்தில் பார்க்கும் போது,தான் ஒரு கோணத்தில் பார்ப்பவன் என்பதை கதைகளின் வழியே நம் கவனத்துக்கு கொண்டுவந்துகொண்டே இருக்கும் பேனாக்காரன்.ஏன் எதற்கு எப்படி ? என்ற  கேள்விகளின்  நாயகர்.. வருங்காலத்தை நிகழ்காலத்தில் சிந்தித்த கற்பனையாளர்..

1935 ம் ஆண்டு இதேநாள் மே 3ல் ரங்கராஜன் என்ற பெயரோடு சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த இவர்தான் ரங்கராஜனாய் எழுத தோன்றி, இடைகாலத்தில் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் எழுதிய ஸ்ரீரங்கம் எஸ்.ஆராக வலம்வந்து, இப்போது சுஜாதா என்ற பெயரில் வாசகர் மனதில் நிலைத்து நிற்பவர்.

 யார் அந்த சுஜாதா?

 முதல்முறையாக சுஜாதா என்ற பெயரைக் கேட்டதும் எல்லோரும் ஒரு எழுத்தாளப் பெண்ணைத்தான் உருவகம் செய்து கொள்கிறார்கள். ஆனால் ரங்கராஜன் என்ற ஆணின் புனைப்பெயராக சுஜாதா என்ற பெண்ணின் பெயர் வந்தது. அவர் தன் மனைவி மீது கொண்டிருந்த அளவற்ற அன்பையும், சமமாக மதிக்கும் பாங்கையும் தான் நமக்கு காட்டுகிறது. ஆம். சுஜாதா என்பது ரங்கராஜனின் மனைவி பெயர்.

1962-ம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் இவரது “இடது ஓரத்தில் ” சிறுகதை வெளிவந்தது. ஆனால் அப்போது குமுதம் இதழில் கோலோச்சி வந்த ரா.கி.ரங்கராஜனின் பெயரோடு குழப்பியதால் தனக்கான அடையாளாமாக வேறு பெயர் வைக்கவேண்டி இருந்தது. கடைசியில் தன் மனைவி பெயர் சுஜாதாவைத், தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.

சுஜாதாவின் முதல் கதை 1953-ம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், துப்பறியும் கதைகள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.

புனைவின் வழியே அறிவியலைக் கொண்டுவரும் அறிபுனை எழுத்தாளர்களில் முற்றிலும் வித்தியாசமான நடையும் கதையமைப்பும் கொண்டு எழுதவல்ல சுஜாதா “அன்றைய விஞ்ஞானத்தின் விக்கிபீடியா”என்றே அழைக்கப்பட்டார்.

எந்திரன் என்றொரு பிரம்மாண்டம் இன்று நம்மால் கொண்டாடப்படலாம். ஆனால் என் இனிய எந்திரா , ஜூனோ போன்ற சொற்களே சுஜாதாவின் அறிபுனைப் படைப்புச் செழுமையை பறைசாற்றும்.

இளமையில் கொல், கொலையுதிர்காலம் மற்றும் கடவுள் வந்திருந்தார் ஆகிய மூன்றும், வாசிப்பு பரீட்சயம் இல்லாதவர்களையும் கூட வாசிப்பை நேசிக்கவைக்கும் படைப்புகள்.. சில்வியா போன்ற ஆங்கில கவிஞர்களையும் . நா. முத்துகுமார் , தாமரை ,கபிலன், விவேகா போன்ற தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர்களையும். கணையாழியின் கடைசி பக்கங்களில் நமக்கு அறிமுகம் செய்தவர்..சிறந்த படைப்புகளால் எழுத்துலகில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சுஜாதாவை வாசிப்பின் வழி வாழவைப்போம்.

எழுத்துலகம் எக்காரணம் கொண்டும் தவிர்க்கமுடியாத “தமிழகத்தின் ஐசக்-அசிமோவ்”சுஜாதாவுக்கு 85 வது பிறந்தநாளில் நியூஸ்ஜெ குழுமம் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறது.

Exit mobile version