எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர் பெ.சு. மணி தமது 87ஆம் வயதில் இன்று மாலை நான்கு மணியளவில் டெல்லியில் காலமானார்.
`வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம், வ.வே.சு. ஐயரின் கம்பராமாயணக் கட்டுரைகள்` உள்ளிட்ட பல தொகுப்பு நூல்களை வெளியிட்டவர்.
`இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பழந்தமிழ் இதழ்கள், வீரமுரசு சுப்பிரமணிய சிவா, எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி. வெங்கட்ரமணி` உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும் கூட.
வெ. சாமிநாத சர்மா மற்றும் ம.பொ.சி.யின் அன்பரான இவர் சாகித்ய அகாதமிக்காக, வாழ்வும் பணியும் வரிசையில் ம.பொ.சி. பற்றியும் சாமிநாத சர்மா பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார். பாரதி அன்பரும் கூட. `பாரதியாரின் ஞானரதம் மூலமும் ஆய்வும், சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்` போன்ற நூல்கள் இவரது படைப்புகளே. விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள், ஸ்ரீசாரதா தேவி, சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்` போன்ற பல புத்தகங்களை எழுதியவர்.
எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர். தினமணி இவரது பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
கதர் வேட்டி, கதர் ஜிப்பா அணிந்து சைக்கிளில் சென்னையை வலம் வந்தவர். சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்தவர். எளிய வாழ்வு வாழ்ந்தவர், பழகுவதற்கு இனிய பண்பாளர். இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.