கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் மறைந்தார்!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற முதுபெரும் எழுத்தாளர் கி.ரா என்ற கி.ராஜநாராயணன் வயது மூப்பால் நேற்றிரவு புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99.

தூத்தூக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922 ம் ஆண்டு கி.ராஜநாரயணன் பிறந்தார். இவரது முழுப்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள் ராமானுஜ நாயக்கர். இதை சுருக்கி கி.ராஜ நாராயணன் என்று வைத்து கொண்டார். இவர், 7ம் வகுப்பு வரை மட்டுமே அவர் கல்வி பயின்றார். விவசாயியாக இருந்த கி.ரா, 40 வயதுக்கு பிறகே எழுத தொடங்கினார்.

அவர் எழுதிய மாயமான் என்கிற சிறுகதை 1958 ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றாங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, நாவல், கிராமிய கதைகள், கடிதம் என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார்.

வாய்மொழிக்கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாக கொண்டிருந்த கி.ரா, வட்டார மரபு, செவ்விலக்கிய கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து தனக்கென தனி நடையை உருவாக்கினார். கோமதி, கண்ணீர், கரிசல் கதைகள், கொத்தைப்பருத்தி, கோபல்ல கிராமம், புதுமைப்பித்தன், மாமலை ஜீவா போன்றவை அவரது முக்கிய படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கி.ரா நல்ல இசைஞானம் கொண்டவரும் கூட. கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடியாக கி.ராஜநாரணயன் திகழ்ந்தார். 1991 ம் ஆண்டு அவர் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் கி.ரா, வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர், தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் என்று உச்சி முகரபடுகிறார். தலை சிறந்த கதை சொல்லியான கி.ரா தள்ளாத வயதிலும் எழுத்தை கைவிடாதராக திகழ்ந்தார். 99 வயதான கி.ரா கடந்த சில நாட்களாக உடல் நளிவுற்று, பாண்டிச்சேரியில் உள்ள தனது வீட்டில் இருந்துவந்தநிலையில் நேற்றிரவு காலமானார். அவரது இறுதி சடங்கு புதுச்சேரியில் கருவடிங்குப்பம் மயானத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.

Exit mobile version