சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி இன்று துவங்கியுள்ளது. இதையொட்டி வடமாநில கோயில்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வடமொழியிலும் வடமாநிலங்கள் பலவற்றிலும் சைத்ர என்றும், தெலுங்கில் சைத்ரமு என்றும் வங்காளியில் சொய்த்ரோ என்றும் அழைக்கப்படுகிற மாதமே தமிழில் சித்திரை என்று வழங்கப்படுகிறது. சித்திரையை வரவேற்கும் விதமாக சைத்ர நவராத்திரி வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சித்திரையை முன்னிட்டு இன்று துவங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ள இந்த வசந்த நவராத்திரியில் துர்க்கையை வழிபட்டு இளவேனில் காலத்து விளைச்சல் நன்கு அமையவேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் வழிபாடு மேற்கொள்கின்றனர்.
மேலும் இந்த நவராத்திரியையொட்டி, இன்று துவங்கி 7 நாட்களுக்கு நாளொன்றுக்கு ஒருவராக, சப்தரிஷிகளையும் வழிபடுவார்கள். இது சப்தரிஷி விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. வசந்த நவராத்திரியின் நிறைவு நாள் ஸ்ரீராம நவமியாகும்.
சைத்ர நவராத்திரியையொட்டி டெல்லியின் புகழ்பெற்ற ஜாந்தேவாலன் கோயிலில் துர்க்கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.