உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியுள்ளது!

உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. அங்கு இதுவரை 40 ஆயிரத்து 548 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 64 ஆயிரத்தை கடந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. இத்தாலியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சூழலில், ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 578 பேரும், ஜெர்மனியில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 742 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 596 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த பட்டியலில் சீனாவை முந்தியுள்ள துருக்கியில், 86 ஆயிரத்து 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 735ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன.

Exit mobile version