உலகின் மிக இளம் வயது தலைவராக பாராட்டப்படும் "கிரீட்டா தன்பர்க்”

16 வயதேயான ஒரு சிறுமி, இன்று உலகின் மிக இளம் வயது மக்கள் தலைவராகப் பாராட்டப்படுகிறார். அவரது ஒவ்வொரு நகர்வும் உலகம் முழுவதும் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

கிரீட்டா தன்பர்க் – ஸ்வீடனைச் சேர்ந்த இந்தப் பள்ளி மாணவிக்கு இப்போது 16 வயதுதான் ஆகின்றது. சில ஆண்டுகள் முன்பு உலகின் தட்பவெப்ப சீர்குலைவு பற்றி இவர் முதன்முறையாகக் கேள்விப்பட்டார். அதில் இருந்து இவரது மனநிலை கடும் பாதிப்பை சந்தித்தது, ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தால் அவரது எடையே குறைந்தது.

கவலைப்படுவதை விட உலகைக் காக்க போராடுவது சிறந்தது என்று கடந்த 2018ஆம் ஆண்டில் கிரீட்டா முடிவெடுத்தார். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் தனது பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் வாசலில் அமர்ந்து ‘உலகைக் காப்போம்’ எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார். 

அமைதி வழியிலான இவரது போராட்டம் உலகம் முழுக்க கவனம் பெற்றது. பலநாடுகளிலும் மாணவர்கள் கிரீட்டாவைப் பின்பற்றத் தொடங்கினர். இப்படியாக நடந்த ‘பள்ளிக் குழந்தைகள் வேலை நிறுத்தம்’ சர்வதேச ஊடகங்களால் ‘வெள்ளிக் கிழமைப் போராட்டங்கள்’ – என்று அழைக்கப்பட்டு, உலகெங்கும் பரவின.கடந்த மார்ச் 15 அன்று நடைபெற்ற பள்ளிக் குழந்தைகள் வேலை நிறுத்தத்தில், இந்தியா உட்பட உலகின் 82 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் 957 இடங்களில் சூழலைக் காக்க அணிவகுப்பு நடத்தினார்கள். இதில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர் என்பது கிரீட்டாவின் ஆற்றலுக்கு ஒரு உதாரணம்.

2018ல் பருவநிலை மாற்றம் குறித்த ஐநாவின் ஆலோசனைக் கூட்டம் இவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து கவுரவப்படுத்தியது, உலகப் புகழ் பெற்ற டைம்ஸ் இதழ் இவரைப் பற்றி ‘அடுத்த தலைமுறையின் தலைவர்’ என்ற பெயரில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. வைஸ் – ஆவணத் தொடரில் கிரீட்டா குறித்து ‘மேக் தி வேர்ல்டு கிரீட்டா அகெய்ன்’ என்ற பெயரில் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. அத்தனைக்கும் மேலாக நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் கிரீட்டா.

பாராளுமன்றத்தின் வாயிலைத் தவிர வீட்டிலும் கிரீட்டா போராடியே வருகிறார். தன் குடும்பத்தினரின் உணவுப் பழக்கத்தை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு இவர் மாற்றினார், வீட்டில் இருந்த டீசல் காரை விற்று பேட்டரி  கார் வாங்க வைத்தார், விமானப் பயணங்களை மேற்கொண்ட குடும்பத்தினரை, படகுப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ள வைத்தார். இந்த மாதம் அமெரிக்காவில் நடந்த ’கால நிலை வேலை நிறுத்த இயக்க’த்திற்கு ஆதரவு தர, ஸ்வீடனில் இருந்து இவர் அமெரிக்காவுக்கு தனியாளாகப் 15 நாட்களுக்கு படகில் பயணித்து வந்தார். இந்த செயல்களே அவரை நோக்கி மக்களை ஈர்க்கின்றன.

உலகின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்டு, காலநிலை சீர்கேடு களையப்பட வேண்டும் – என்பதுதான் கிரீட்டாவின் நோக்கம், அதனை அவர் எட்ட நாமும் வாழ்த்துவோம்.

 

கிரீட்டா தன்பர்க் பற்றி அறிந்துக்கொள்ள: 

https://youtu.be/DLqGFuVeUPs

https://youtu.be/oCVQdr9QFwY

Exit mobile version