பிரான்சு என்றால் உலக அதிசயமான பாரிசின் ஈபிள் டவர் தான் நம் நினைவுக்கு வரும். அதற்கு காரணம் ஈபிள் டவரின் வானாளாவிய உயரம் தான். அதே பிரான்சில் ஈபிள் டவரை விட அதிக உயரத்தில் பாலம் ஒன்று உள்ளது பற்றி கேள்வி பட்டிருக்கிறோமா?
உலகின் வல்லரசுகளில் ஒன்றாக திகழும் பிரான்சில் காண்போரைக் கவரும் சுற்றுலாத் தலங்கள் ஏராளம். ஈபிள் டவர், லவரே அருங்காட்சியகம், கார்கசோன் என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் மேகங்களுக்கு இடையே வானத்தில் மிதக்கும் மிலாவ் வியாடக்ட் பாலம் அதில் பயணம் செய்பவர்களின் மனதை கொள்ளை கொள்கிறது
மிலாவ் வியாடக்ட் பாலம் பிரான்சின் ஜார்ஜ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் பாரிஸ் மற்றும் தென்பகுதியில் உள்ள பெய்சர்ஸ் நகரங்களை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2 புள்ளி 5 கிலோ மீட்டர் நீளமும் 32 மீட்டர் அகலம் கொண்ட இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிக்காக சுமார் 19 ஆயிரன் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாலத்தை தாங்குவதற்கான கேபிள்கள் சுமார் 5000 டன் இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்டது.
மிலாவ் வியாடக்ட் பாலம் கட்டுவதற்கு பிரான்சின் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சாத்தியமற்றது என விமர்சனம் செய்தன. கரடுமுரடான நிலப்பரப்பு, சுமார் 180 கிமீ வேகத்தில் வீசும் காற்று உள்ளிட்ட பல்வேறு சவால்களை கட்டுமானக் குழுவினர் சந்தித்தனர். மொத்தம் 7 தூண்கள் கொண்ட பாலத்தில் மிக உயரமான தூணின் நீளம் 343 மீட்டராகும். இது ஈபிள் டவரின் உயரத்தை விட 20 மீட்டர் அதிகமாகும். இவ்வளவு உயரத்தில் 3600டன் எடை கொண்ட பாலத்தின் பாகங்களை சரியாக பொருத்துவது பொறியியல் வல்லுநர்களுக்கு மிகவும் சவாலாக திகழ்ந்தது. இந்த சவாலை எதிர்கொள்வதற்காக கூடுதலாக 7 தற்காலிக தூண்கள் கட்டப்பட்டன. இந்தத் தூண்கள் மீது பாலத்தின் பாகங்கள் வைக்கப்பட்டு ஹைட்ராலிக் இயந்திரங்கள் மற்றும் ஆப்பு போன்ற அமைப்பு கொண்டு மெதுமெதுவாக நகர்த்தப்பட்டது.
இவ்வாறு சுமார் 3 வருடங்களில் கட்டிமுடிக்கப்பட்டது. பாலத்தின் கட்டுமானப் பணியில் 7 ஐரோப்பிய நாடுகள் பங்கேற்றன. 235 பேர் கட்டுமானப் பணியின் போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
2004ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த பாலம் அந்நாட்டின் கட்டடவியல் சாதனையை உலகிற்கு பறைசாட்டுகிறது. மேலும் சுற்றுலா மூலம் நாட்டிற்கு அதிக வருவாயையும் ஈட்டித் தருகிறது.