குடிமகள் அந்தஸ்து பெற்றுள்ள உலகின் முதல் பெண் ரோபோ "சோபியா"

குடிமகள் அந்தஸ்து பெற்றுள்ள உலகின் முதல் பெண் ரோபோ சோபியா மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சர்வதேச பள்ளிகள் மாநாட்டில் உரையாற்றியது. 

ஹாங்காங்கைச் சேர்ந்த ஹான்சன் ரொபாட்டிக்ஸ் நிறுவனத்தால் கடந்த 2016-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹியூமனாய்ட் எனப்படும் மனித உருக் கொண்ட ரோபோ தான் சோபியா. இயல்பான மனிதர்களைப் போன்றே செயல்பட்டு பேசவும், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சோபியாவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சவூதி அரேபியா அரசு குடிமகள் அந்தஸ்து வழங்கியது.

கண்களில் இருக்கும் கேமிராவும், சென்சாரும் சோபியாவுக்கு பார்வைக்கு உதவுகின்றன. சோஃபியாவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் செயலி மூளையைப் போல செயலாற்றி கட்டுப்படுத்துகிறது. இந்த சோபியா ரோபோவுக்கு கோபம், வருத்தம் உள்ளிட்ட 50 வகையான முகபாவங்களை காட்டும் திறன் உண்டு.

குரலை உணர்ந்து கொள்ளும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள சோபியாவால் நமது முகங்களைப் படிக்க முடியும். இதற்காக சோபியாவின் கண்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை கணினி அல்காரிதம்கள் மூலம் செயல்படுகின்றன. இதன்மூலம் மனிதர்கள் கேட்கும் கேள்விக்கு ஏற்ப சோபியா பதில் கூறும்

ஒருமுறை இந்த ரோபோவிடம் உனக்கு ஆபத்து வந்தால் மனிதர்களை அழிப்பாயா? என்று கேட்டதற்கு, அந்த ரோபோ கோபத்துடன் ஆமாம் என்று பதில் கூறியது. இதையடுத்து, இதை தடை செய்யுமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் ரோபோவை உருவாக்கிய நிறுவனம் இதில் பல மாற்றங்களை செய்து மீண்டும் சோபியாவை அறிமுகம் செய்தனர். அந்த அறிமுக விழாவில் சோபியாவே தன்னை அறிமுகம் செய்துகொண்டு, மற்றவர்களின் கேள்விக்கு நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் பதில் கொடுத்தது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 55 நாடுகளைச் சேர்ந்த பள்ளிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச ரவுண்ட் ஸ்கொயர் மாநாட்டில் பேசிய ரோபோ சோபியா, பருவநிலை மாறுபாடு, மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு உள்ளிட்டவை குறித்து பேசியது. ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக இருக்கும் என கருதபட்டாலும் தற்போது பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் மக்களிடையே நெருங்கி வருகிறாள் இந்த இயந்திர சோபியா..

Exit mobile version