3D பிரின்ட்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு, மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மெக்சிக்கோவில் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பேரிடர் காலங்களில் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்த நியூ ஸ்டோரி என்ற நிறுவனம், ஐகான் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, 3D பிரின்ட்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கட்ட முடிவு செய்தது. அதன்படி மெக்சிக்கோவின் டபஸ்கோ மாநிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு, வால்கர் 2 என்ற 3D பிரின்ட்டர் மூலம் 500 சதுர அடியில் அமைந்த 2 வீடுகளை முதல் கட்டமாக அந்நிறுவனம் கட்டியுள்ளது.
இந்த 3D பிரின்ட்டரானது, 9 அடி உயரம், 28 அடி அகலம் கொண்ட, 2 ஆயிரம் சதுரஅடி வீடுகளை கட்டும் திறன் பெற்றதாகவும், வழக்கத்தை விட இரு மடங்கு வேகத்தில் இந்த 3D பிரின்ட்டர் வீடுகளை கட்டும் எனவும் ஐகான் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சமையல் அறை, 2 படுக்கை அறைகள், ஒரு கழிவறையைக் கொண்ட அமைப்புடனும், நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலும் வீடு கட்டபட்டுள்ள நிலையில், 2020ஆம் ஆண்டுக்குள் 50 வீடுகளை கட்டித்தர நியூ ஸ்டோரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.