உலக தாய்மொழி தினம்!

தாயை பழித்தவனை தாய் தடுத்தால் விட்டுவிடு, தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே என புரட்சி கவிஞர் பாரதிதாசன் முழங்கியதில் இருந்து தாய்மொழியின் முக்கியத்துவத்தை அறியலாம்….இத்தகைய சிறப்பு வாய்ந்த தாய்மொழியை பெருமைப்படுத்த ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. 

உலகெங்கும் அன்னையர் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டும் போதே ஊட்டி வளர்க்கும் முதல்மொழியே தாய்மொழியாக அறியப்படுகிறது.

எத்தனை மொழிகளை ஒருவன் கற்றாலும் தாய்மொழியை அறிந்திருக்காவிட்டால் அவன் அடையாளம் இழந்தவனாகிறான். தாய்மொழியில் தாயின் அன்பும் கலந்திருக்கும் என்பதால் உணர்வோடு பின்னிபிணைந்த மொழியாகவே தாய்மொழி கருதப்படுகிறது. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பதும் அவர்களின் தாய்மொழியே.

தாய்மொழியை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் நாளை உலக தாய்மொழி தினமாக கடந்த 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

தாய்மொழி என்பது ஒரு இனத்தின் பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைமுறை, சிந்தனைகளுக்கு அவசியமாகிறது. அறிவியலில் அதிகபட்ச நோபல் பரிசை பெற்றவர்கள் எல்லாம் தங்களின் தாய்மொழியில் பயின்றவர்களாகவே இருக்கிறார்கள்

தாய்மொழியை புறக்கணித்து பிள்ளைகளின் இயல்பான சிந்தனையை சிதைக்கிறோம் என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையிலும், தாய்மொழியை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து விடுகிறோம் என்பதும் மறுப்பதற்கில்லை.

தாய்மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத்தேவை மட்டுமல்ல…அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்  என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.

தாயையும், தாய் நாட்டையும் நேசிப்பதை போல் தாய்மொழியையும் நேசிக்க இந்நாளில் உறுதியேற்போம்….

Exit mobile version