ஆஸ்துமா கட்டுக்கதைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நாள்

உலக ஆஸ்துமா தினமான இன்று அந்நோயின் தாக்கம் குறித்தும், அதனை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

 

குழந்தைகள், பெண்கள் என பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கக்கூடிய நோய் ஆஸ்துமா. இந்நோயானது மூச்சுக்குழலின் உட்பகுதியில் வீக்கம் மற்றும் தசைச் சுருக்கத்தை ஏற்படுத்தும்.

சுவாசக்கோளாறு, மூச்சிறைப்பு, தொடர் இருமல், மார்பில் இறுக்கம், சோர்வு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.

ஆஸ்துமாவை பூரணமாக குணப்படுத்த, இன்றளவிலும் மருந்து எதுவும் இல்லை. முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தி, வாழ்நாளை நீட்டிக்கலாம் என்பதுதான் மருத்துவ உலகில் இருக்கும் வாய்ப்பு.

ஆனால் அச்சப்படும் அளவுக்கு ஆஸ்துமா என்பது பெரிய நோய் அல்ல என அலட்சியம் செய்பவர்களும் ஏராளம் உண்டு.

ஒட்டுமொத்த உலகில் 33 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கும் நோய் ஆஸ்துமா.

அதில் 15 முதல் 20 சதவிதத்தினர் இந்தியர்கள் என்பது தான் அதிர்ச்சி தகவல். அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 பேர் ஆஸ்துமாவால் உயிரிழப்பதாக, உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் கூறுகின்றன.

2016ஆம் ஆண்டில் மட்டும் ஆஸ்துமாவால் உலகில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 918 பேர் தங்களது உயிரைப் பறி கொடுத்தனர்.

இந்த கொரோனா காலம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரத்தை உணர்ந்து ஆஸ்துமா நோயை பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

ஆஸ்துமா ஏற்படுவதற்காக காரண, காரணிகள் என்னென்ன, தவிர்ப்பது எப்படி என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த 1993ஆம் ஆண்டில் Global Initiative for Asthma என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பின் மூலம் 1998ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆஸ்துமா தொடர்பான கட்டுக்கதைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது இந்த ஆண்டின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா ஒரு மரபணு நோய், அதனை குணப்படுத்த இயலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது, ஸ்டீராய்டு மருந்துகள் ஆபத்தானவை என்பதுபோன்ற ஏராளமான கட்டுக்கதைகள் மக்கள் மனதில் வேரூன்றியுள்ளன.

ஆனால் அவையெல்லாம் பொய் என்பதை அறிவியல் உலகம் மெய்ப்பித்திருக்கிறது.

அறிவியலின் துணைகொண்டு ஆஸ்துமாவை வெல்வோம்

Exit mobile version