சர்வதேச யோக தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கொரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் யோகசானங்கள் பற்றி விவரிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ஆம் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், யோகா தினம் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. ஆனாலும், மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் யோகாசனங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு வகையான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன.
மேலும், இன்றைய சூழலில், கொரோன வைரஸ் அச்சம், அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் ஒவ்வொருவருக்கும் மனரீதியான பாதிப்புக்களை அதிகரித்துள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் யோகாசனங்கள், சுவாசத்தை சீராக வைக்க உதவும் யோகாசனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்கிறார் மருத்துவர் இந்திரா தேவி.
8 வயது சிறியவர்கள் முதல் முதியவர் வரை வீட்டில் இருக்கும் நேரத்தில் ஆசனங்கள், மூச்சு பயிற்சி, தியானங்கள் செய்யலாம் என்றும், தாடா ஆசனம், கத்தி சக்கராசனம், வஜ்ஜிராசனம், பத்மாசனம் உள்ளிட்ட ஆசனங்களும், நாடி சோதனா பிரணயாமா, நாடி சுத்தி, உள்ளிட்ட மூச்சு பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சுவாச நிலை சரியாகி, மன அழுத்தம் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும மருத்துவர் இந்திரா தேவி தெரிவிக்கிறார். கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் கூட விரைவில் குணமடைய யோகாசனம் உதவுவதாக கூறுகிறார்கள் நிபுணர்கள். யோகா செய்தால் உடல் பிரச்சினை மட்டுமின்றி மன பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும்.