உலக மல்யுத்த தரவரிசையில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
உலக மல்யுத்த அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா 96 புள்ளிகளுடன் முதன் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தலா ஒரு தங்கமும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியும், ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரு வெண்கலமும் வென்றதன் மூலம் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் பெண்களுக்கான தரவரிசையில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 4 வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற பூஜா தண்டா 57 கிலோ எடை பிரிவில் 52 புள்ளிகளுடன் 6 வது இடம் பிடித்துள்ளார்.