உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினத்தின் நோக்கமானது, உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திடவும். தண்ணீரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் clean Water Foundation இத்தினத்தை 2003ல் அறிவித்தது. நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்புவியில் வாழ இயலாது. நீரின் மூலங்கள் பல. நாம் நீரை ஆறு, ஏரி, குளம், நதி போன்றவற்றிலிருந்து பெறுகிறோம். இப்பூமி எழுபத்து ஒரு சதவீதம் நீரால் ஆனது என அறிவியல் கூறுகின்றது. மேலும், நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. நீர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பிராணிகள், தாவரங்கள் உயிர் வாழவும் அடிப்படையாக அமைகின்றது.
நீர் மனித வாழ்வின் அன்றாடத் தேவைகளில் மிக அடிப்படையானது. மனிதர்களுக்குக் குளிக்க, சமைக்க, பாத்திரங்கள் வாகனங்கள் போன்றவற்றைக் கழுவ நீர் இன்றியமையாததாக அமைகிறது. மேலும், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தினமும் நீரை அதிகளவில் பருக வேண்டுமென்று மருத்துவம் கூறுகிறது. தினசரி ஒரு குறிப்பட்ட அளவு நீரைப் பருகும் ஒருவனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், விவசாயத்திற்கும் நீர் இன்றியமையாததாக இருக்கின்றது.
மின்சார உற்பத்திக்கும் நீரே காரணமாய் அமைகிறது. பண்டைய காலந்தொட்டு இன்றைய காலம் வரைக்கும் போக்குவரத்துக்கு நீர் பெரும் பங்காற்றுகிறது.. சாலை வசதிகளும் இரயில் தண்டவாள வசதிகளும் இல்லாத பல இடங்களில் இன்னும் போக்குவரத்துக்கு நீர் ஊடகங்களாக விளங்குகின்றன. நீர் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து விட்டது என்று கூறினாலும் அது மிகையாகாது. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்பூமியில் வாழ்வது என்பது இயலாத காரியம்.
நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.நாமும் இன்னாளில் நீரின் தேவை உணர்ந்து நீரினை சேமிப்போம்….