நேற்று நம்முடன் இருந்தவர் இன்று இல்லை..! தற்கொலை இறப்புகளைத் தடுக்கமுடியாதா?

ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. 20 வினாடிக்கு ஒரு நபர் தற்கொலை என்பது துல்லிய கணக்கு.அவமானம், தோல்வி, விரக்தி, மன அழுத்தம், சமூக ரீதியாக தனிமைப்படுதல் உள்ளிட்டவை மனிதனை தற்கொலைக்கு துண்டுகிறது என்றும், குறிப்பாக 15 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணம் அதிகம் ஏற்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பட்டியலின்படி இந்தியாவில் தற்கொலை சம்பவத்தின் சதவீதம் 16 புள்ளி 6 ஆக உள்ளது. இந்தியாவில் சென்னை,டெல்லி, மும்பை, பெங்களூரு உட்பட 53 நகரங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் காரணிகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் குடும்பத்தினருக்கும் அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உள்ளதாகவும் கருதப்படுகிறது.

தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பவர்களிடம் வெளிப்படையாக பேசுதல் அவசியம் என்று கூறும் மருத்துவர்கள், வெளிப்படையாக பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது எனக் கூறுகின்றனர். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்தாண்டு உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் “Working together to Prevent Suicide” என்பதாகும். தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான் எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, கூட்டு முயற்சி தற்கொலையின் எண்ணிக்கையையும், அதன் தாக்கத்தையும் குறைக்கும் என உறுதிபட தெரிவித்துள்ளது.

 

Exit mobile version