ஸ்பைக் என்று பெயர் வைத்து அழைக்கப்படக்கூடிய சிவாவா இன கலவை நாய் ஒன்று 23 ஆண்டுகள் 7 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை பிடித்துள்ளது. பொதுவாக நாம் நம்முடைய வீடுகளில் வளர்க்கக்கூடிய நாய்கள் 10 முதல் 14 ஆண்டுகள் உயிர் வாழும். மீறினால் 18 வயது வரை வாழக்கூடிய நாய்கள் உண்டு. ஆனால் இந்த ஸ்பைக் 23 ஆண்டுகள் வாழ்ந்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஜினோ என்ற 22 வயதான சிவாவா கலப்பு இன நாய் உலகின் மிக வயதான நாய் என்று சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருந்தது. இந்நிலையில் அதே இனத்தை சேர்ந்த ஸ்பைக், ஜினோவை பின்னுக்குத் தள்ளி உலகின் மிக வயதான நாய் என்று கின்னஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. நவம்பர் 1999 இல் பிறந்த ஸ்பைக் 2010ஆம் ஆண்டுவாக்கில்தான் தற்போதைய உரிமையாளரான ரீட்டா கிம்பால் கைகளுக்கு கிடைத்துள்ளது. ஸ்பைக்கை அவர் மளிகைக் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் அடிப்பட்ட நிலையில் கண்டறிந்து வளர்த்துள்ளார்.
இந்த ஸ்பைக் நாய் மிகவும் சிறிய நாயாக இருந்தாலும் துணிவு மிக்கதாக உள்ளது. பெரும்பாலும் சிவாவா இன நாய்கள் அதிக ஆண்டுகள் வாழும் என்பது கூடுதல் தகவல்.