பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் சாதனை

சென்னையில் பத்தாயிரம் மாணவிகள் ஒரே இடத்தில் குழுமி  பரத நாட்டியம் ஆடியது கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி குறித்த தொகுப்பை தற்போது காணலாம்

தமிழகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த நடனம், வெளிநாட்டினரை கவர்ந்திழுக்கும் நடனம் என்றால் அது பரத நாட்டியம் தான். மேலும் தெய்வீக கலை என்றும் பரத நாட்டியம் அழைக்கப்படுகிறது.  இந்த தொன்மை வாய்ந்த நடனத்தை உலகளவில் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக, செனையையடுத்த கெளரிவாக்கத்தில் மாபெரும் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சதிர் 10000 என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை  தமிழக அரசின் சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்திருந்தது. கின்னஸ் புக் ஆப் ரெக்கார்டு அமைப்பிலிருந்து சோஃபியா கிரினேக்கேர் மற்றும் குழுவினர் பார்வையாளர்களாக வருகை தந்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பரதநாட்டிய பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 176 மாணவிகள் வந்திருந்தனர்.  இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் 7,190 மாணவர்கள் பங்கேற்று பரத நாட்டியம் ஆடி உலக சாதனை படைத்திருந்த நிலையில் அதை முறியடிக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் இந்நிகழ்ச்சியில் செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ்,சுற்றுலா துறை இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கீதாஞ்சலியுடன்  தொடங்கிய  பரத நாட்டியத்தில் திருக்குறளை பாடலாக இசையமைத்து அதற்கேற்ப மாணவிகள் நடனமாடினர்.  நடனத்தின் பல்வேறு கூறுகளையும் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையையும் ஆராய்ந்த கின்னஸ் குழுவினர், 10 ஆயிரத்து 176 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்ததாகவும் அறிவித்தனர்.

இதனையடுத்து கின்னஸ் சாதனைக்கான சான்றை சுற்றுலாத்துறை இயக்குநர்  அமுதா பெற்றுக் கொண்டார். தமிழக பாரம்பரியமிக்க நாட்டியத்தை கற்றுக்கொண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது பெருமையாக இருப்பதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் கூறினர்.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க உதவிய சுற்றுலாத்துறைக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த மாணவிகள் மேலும் இதுபோன்ற பல சாதனைகளை படைக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்

Exit mobile version