பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும், இயற்கையின் மிகப்பெரிய கொடையாகவும், கடல் விளங்குகிறது. இன்று சர்வதேச கடல்தினம் கொண்டாடப்படும் நிலையில், கடல் பற்றிய செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
ஆழி, பேராழி, துறை, தொண்டிரை, பெருநீர், முந்நீர், வேழாழி என 70க்கும் மேற்பட்ட பெயர்களால் அழைக்கப்படும் கடல், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக விளங்குகிறது. கடல் நீரில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பு அதிகளவில் காணப்பட்டாலும், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புகளும் பல தனிமங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. கடலில் எண்ணற்ற உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. மக்களுக்கு மீன்கள் உள்ளிட்ட அதிகளவிலான உணவுப் பொருட்களை கடல் வழங்கி வருகிறது.
இத்தகைய பெருமைக்குரிய கடல், சமீப காலங்களில் பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் அதிகளவில் மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி, கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி முதல், பன்னாட்டு கடல்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் மையமாக கொள்ளப்படும் நிலையில், இந்த ஆண்டு மனிதனுக்கும் கடலுக்குமான உறவை மேம்படுத்துதலை கருப்பொருளாக ஐ.நா அறிவித்துள்ளது.
பண்டைய சோழர் காலத்தில் கடல் போக்குவரத்தின் மூலம், மன்னர்கள் தங்களது ஆதிக்கத்தை பல நாடுகளில் நிலைநாட்டினர். தற்போதும் கடல்வழி போக்குவரத்து மூலம் மிகப்பெரிய பொருளாதாரம் நடைபெற்று வருகிறது. பலகோடி மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள கடல், சமீப காலங்களில் அதிகளவில் மாசடைந்து வருவதாக மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள கடற்கரைக்கு மட்டுமே நீலநிறக் கொடி, அதாவது, அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தலாம் என்ற நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடலில் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவது, மனித குலத்தையே அழித்துவிடும் என்றும், கடல் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு, கடல் வாணிபம் மற்றும் போக்குவரத்து ஆகியவை உரிய முறையில் நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள்.
இதனிடையே, கடலை தங்களது சொத்துக்களை போல பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். உலக வங்கியின் நிதி உதவியுடன், தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை மற்றும் முகத்துவாரங்களை சுத்தப்படுத்தும் பணிகளும், அகலம் மற்றும் ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புவி வெப்பமயமாதலின் காரணமாக கடல் நீர் மட்டம் மற்றும் வெப்பநிலை அதிகரித்து வருவது மனித குல அழிவிற்கு வழிவகுக்கும் காரணி என்பதை உலக நாடுகள் தற்போது அறிந்துள்ளன. புவியை பாதுகாக்க, கடலை முதற்கட்டமாக பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, நல்ல தீர்வு கிடைக்கும் என்று கடல்சார் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.