உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம்

உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, தற்போதைய சூழலில் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

உலகிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இயற்கையை நாம் பாதுகாத்தால் தான், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆதிகாலம் முதலே மனிதனின் வாழ்க்கையானது இயற்கையை சார்ந்தே உள்ளது, காடுகளுக்கு நடுவில் இயற்கையான சூழலில் மனிதர்கள் வாழ்ந்த நிலை மாறி தற்போது இயற்கையை விட்டு வெகு தூரம் விலகி நகரங்களில் பல்வேறு மாசுகளுக்கு இடையே மனிதர்கள் வாழும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம், இயற்கை வளங்கள் மீது மனித சமூகம் நடத்தும் தாக்குதல்கள் தான். கடந்த 200 ஆண்டுகளாக இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், சுற்றுச்சூழல் மாசுபாடு , காலநிலை மாறுதல், புவி வெப்பமாதல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சார்ந்த பிரச்சினைகளை நாம் தற்போது சந்தித்து வருகிறோம்.

அடுத்த 12 ஆண்டுகளுக்குள் இருக்கின்ற இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் அனைத்து உலக நாடுகளும் இருப்பதாக எச்சரிக்கும் இயற்கை ஆர்வலர்கள், இயற்கை வளங்களை மேம்படுத்தும் திட்டங்களில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

எதிர்கால சந்ததியினர் இயற்கையான சூழலில் வாழ இயற்கை வளங்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இயற்கை நமக்கு எடுத்து கூறும் நியதி.

Exit mobile version