இன்று உலகக் கொசுக்கள் தினம்-உலக கொசுக்கள் தினம் என்று ஒன்று எதற்கு?

உலகில் அதிக மனிதர்களைக் கொல்லும் கொடூர கொலையாளியான கொசுக்கள் தினம் இன்று.. உலக கொசுக்கள் தினம் என்று ஒன்று எதற்கு?

உலகக் கொசுக்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மலேரியா என்ற நோய் காற்று மாசுபாட்டால் பரவுகிறது – என்று உலகம் நினைத்துக் கொண்டிருந்தபோது, ‘மனிதர்களுக்கு இடையில் கொசுக்கள்தான் மலேரியாவைப் பரப்புகிறது’ என்பதை 1897-ல் கண்டுபிடித்த பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ராசின் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைக்கு உலகில் உள்ள உயிரினங்களில் எல்லாம் மிக அபாயகரமான ஒரு உயிரினம் கொசு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஒவ்வொரு ஆண்டும் கொசுக்கடி மூலம் பரவும் நோய்களால் மட்டும் சுமார் 7 லட்சம் மக்கள் இறப்பைச் சந்திக்கின்றனர்.

இவர்களில் 4 லட்சம் பேர் மலேரியாவால் மட்டுமே இறக்கின்றனர். இந்த அளவுக்கு மனிதர்களை வேறெந்த உயிரினமும் கொல்வது இல்லை. கொசுக்களில் மொத்தம் 40 இனங்களும் 3ஆயிரம் சிற்றினங்களும் உள்ளன. அவற்றில் 3 சிற்றினங்கள்தான் மனிதர்களிடையே நோயைப் பரப்புகின்றன. அவை ஏடிஸ், அனபெலஸ் மற்றும் கியூலெக்ஸ்.

இவற்றில் ஏடிஸ் கொசுவானது சிக்கன்குனியா, டெங்கு, யானைக்கால் நோய், பிளவு பள்ளத்தாக்குக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், சிக்கா ஆகிய நோய்களையும், அனபெலெஸ் கொசுவானது மலேரியா, யானைக்கால் ஆகிய நோய்களையும், கியூலெக்ஸ் கொசுவானது ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால், மேற்கு நைல் காய்ச்சல் ஆகிய நோய்களையும் பரப்புகின்றன. இந்தக் கொசுக்களை கட்டுபடுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு எப்போதும்
தேவைப்படுகிறது.

இதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன?

வீட்டில் கொசுக்கள் நுழையாமல் இருப்பதையும், பரவாமல் இருப்பதையும் அடிக்கடி உறுதி செய்துகொள்ள வேண்டும். வீட்டில் உள்ள நீர்க் கலன்களை எப்போதும் மூடி வைக்க வேண்டும். இதனால் கொசு முட்டை இடுவதைத் தவிர்க்க முடியும். வாரத்திற்கு ஒரு முறையாவது, நீர்த் தொட்டிகள், கொள்கலன்கள், குளிரூட்டிகள், பறவைக்கான நீர்க்கலயங்கள், வளர்ப்பு பிராணிகளின் நீர்க்கலன்கள், நீர்க்கசிவு தட்டுகள் ஆகியவற்றில் உள்ள நீரை முழுதும் வெளியேற்றி அவற்றைக் காய விடவும். திறந்த வெளிகளில் கிடக்கும் நீரைத் தேக்கக்கூடிய பொருட்களை அகற்ற வேண்டும்.

சாக்கடை மற்றும் தட்டையான கூரைகளில் நீர் தேங்காமல் வடிகின்றதா என்று அவ்வப்போது சோதிக்க வேண்டும். தோட்டங்கள், குளங்கள் மற்றும் நீர்த்தேங்கும் இடங்களில் முட்டைப்புழுக்களை உண்ணும் கப்பி, கம்பூசியா போன்ற மீன்களை வளர்க்கலாம். தேங்கிய நீரை வெளியேற்ற முடியாதபோது, சூழலை பாதிக்காத உயிரியல் முட்டைப்புழு அழிப்பான்களைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலில் அதிக தண்ணீர் தேங்கினால் உடனே உள்ளாட்சி அமைப்புகளின் உதவியைப் பெற்று அங்கு மருத்துகளைத் தெளிக்கவும்.

கொசுக்கள் பரவும் காலங்களில் வீட்டைச் சுற்றி தெளிப்பான் மருந்துகள் அல்லது புகைப்பான் மருந்துகளைப் பயன்படுத்தவும். கொசுக்கள் அதிகமாக உள்ளபோது, கூடியவரைக்கும் முழு உடல் மறையும் அளவில் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். வீட்டின் சன்னல் மற்றும் கதவுகளிலும், படுக்கையிலும் கொசுவலை அமைப்புகளை எப்போதும் பயன்படுத்தவும்.

Exit mobile version