உலக முதலீட்டாளர்கள் மாநாடு : குடியரசுத் துணைத்தலைவர் இன்று வருகை

சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார். சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையத்தில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநாடு மற்றும் அதையொட்டி நடைபெறும் கண்காட்சியையும் துவக்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தமிழக இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டாம் நாளான இன்று தலைமை விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Exit mobile version